Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கருப்பு | திரைவிமர்சனம்

May 17, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
கருப்பு | திரைவிமர்சனம்

தயாரிப்பு : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

நடிகர்கள் : சூர்யா, ஆர். ஜே. பாலாஜி, த்ரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, சுவாசிகா, நட்டி நடராஜ், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலி கான் மற்றும் பலர்.

இயக்கம் : ஆர். ஜே. பாலாஜி

மதிப்பீடு : 2.5 / 5

பல்வேறு தடைகளை கடந்தும்.. நிதி சிக்கல்களை எதிர்கொண்டும்.. படமாளிகையில் வெளியாகி இருக்கிறது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம். இப்படத்திற்கு சூர்யாவின் ரசிகர்களின் எதிர்வினை என்ன? தமிழ் திரைப்பட ரசிகர்களின் எதிர்வினை என்ன? என்பதை தொடர்ந்து காண்போம்.

அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து மட்டஞ்சேரி சுகுமாரன் (இந்திரன்ஸ்) எனும் வயதான தந்தையும், அவருடைய ஒரே மகளான பினு (அனகா மாயா ரவி) என்பவரும் புகையிரத பயணம் மூலம் சென்னைக்கு வருகை தருகிறார்கள். வரும் வழியில் சக பயணியின் தவறான வழிகாட்டுதலால் ஓரிடத்தில் இறங்குகிறார்கள். இரவு நேரம் என்பதாலும்.. முதல்முறையான சென்னை பயணம் என்பதாலும்..

இவர்களிடம் இரண்டு முகமூடி நபர்கள் வழிப்பறி செய்து விடுகிறார்கள். இதில் மகளின் சத்திர சிகிச்சை செலவுக்காக எடுத்து வந்த 60 சவரன் தங்க நகை கொள்ளை போகிறது. இது தொடர்பாக தந்தையும் மகளும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். காவல்துறையினரின் விசாரணையில் திருடர்களிடமிருந்து 45 சவரன் தங்க நகை மீட்கப்படுகிறது.

அதை காவல்துறை பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைப்பதற்கு முன் இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை முறைப்படி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக பேபி கண்ணன் (ஆர். ஜே. பாலாஜி) எனும் சட்டத்தரணியிடம் தங்களுடைய நகையை நீதிமன்றம் மூலம் மீட்டுத் தருமாறு கேட்கிறார்கள். பேபி கண்ணன் எனும் சட்டத்தரணி அந்த நீதிமன்றத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். அவர் மட்டஞ்சேரி சுகுமாரன் தொடர்பான வழக்கை சுயநலத்துடன் இழுத்தடிக்கிறார். இதனால் மனதளவில் பாதிக்கப்படும் மட்டஞ்சேரி சுகுமாரன் அந்த வளாகத்தில் உள்ள வேட்டை கருப்பு எனும் காவல் தெய்வத்திடம் முறையிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து வேட்டை கருப்பு எனும் அந்த காவல் தெய்வம் சரவணன் எனும் சட்டத்தரணி மூலம் இவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத்தர முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் சரவணனின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதும், நீதிமன்றத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள சட்டத்தரணி பேபி கண்ணனின் ஆதிக்கத்திற்கு எதிராக சரவணன் மற்றும் பிரீத்தி ஆகிய சட்டத்தரணிகள் குரல் கொடுக்கிறார்கள்.

இவர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருக்கும் காவல் தெய்வமான கருப்பசாமியின் ஆதரவும், ஆற்றலும் கிடைக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை விவரிப்பதே இப்படத்தின் திரைக்கதை.

சமூக பக்தி படத்தை பற்றி அறிந்திருப்போம். அதாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவனும் இறைவியோ நேராகவோ அல்லது அசரீரியாகவோ தோன்றி உதவி செய்திருப்பதை அறிந்திருப்போம். ஆனால் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் இவை பொதுநலம் கலந்த சமூக பக்தி படமாக உருவாகி புதிய பாதையை உண்டாக்கி இருக்கிறது.

அதாவது நீதிமன்றம் என்பது ஏழை எளிய மக்களின் இறுதி நம்பிக்கை. இங்கு பணியாற்றும் அனைவரும் அறச்சிந்தனையுடன் இயங்க வேண்டும். அதை தவிர்த்து சுயநலத்துடனும் வணிக நோக்கத்துடனும் இயங்கினால் அவர்களுக்கு தண்டனை உண்டு என்பதை ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் உணர்த்தியிருக்கிறார்.

கருத்தியல் ரீதியாக நல்ல விடயம் என ஒப்புக்கொண்டாலும் அதனை காட்சியாக விவரிப்பதிலும் திரைப்பட மொழியாக விவரிப்பதிலும் படக்குழு இன்னும் கூடுதலாக மெனக்கட்டிருக்கலாம். சூர்யாவின் ரசிகர்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கும் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி குறித்து கலவையான விமர்சனங்களையே முன்வைக்கிறது.

ஏனெனில் படம் தொடங்கி முப்பது நிமிடங்களுக்குப் பிறகு சூர்யா திரையில் தோன்றுகிறார். இரண்டாம் பாதியிலும் பல இடங்களில் ஆர். ஜே. பாலாஜியின் திரை தோற்றம் சூர்யாவின் ரசிகர்களை நெருடச் செய்கிறது.

ஒரு சாதாரண நகை திருடு போன விவகாரத்தில் பாமர மக்களுக்கு நீதிமன்ற நடைமுறை கடினமானது. இதில் சட்டத்தரணிகள் – நீதியரசர்கள் – காவல்துறையினர் – ஆகியோரின் கூட்டணி தற்போதைய சூழலில் அபாயகரமானதாக உள்ளது என யதார்த்தத்தை உணர்த்தியிருக்கும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி.. அதற்கான தீர்வாக காவல் தெய்வத்தை துணைக்கு அழைத்திருப்பதில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு இல்லை.

இருப்பினும் சூர்யா காவல் தெய்வம் கருப்பசாமியாகவும்.. கருப்பனாகவும்.. வேட்டை கருப்பனாகவும்.. கோட்டை கருப்பனாகவும் திரையில் தோன்றுவதும்.. கையில் அருவாளுடன் ஆவேசமாக நடனம் ஆடுவதும் ரசிகர்களை வியக்க வைக்கிறது. காவல் தெய்வத்தின் கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடிப்பது முதல் முறை என்றாலும் அதிலும் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் நாயகனாக வில்லத்தனம் கலந்த பேபி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆர். ஜே. பாலாஜி பல இடங்களில் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவ தருணங்களை அள்ளி வழங்குகிறார்.சூர்யாவிற்கு மாஸான ஆக்சன் காட்சிகளை வைத்து அவருடைய ரசிகர்களையும் திருப்தி செய்திருக்கிறார் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி.

ப்ரீத்தி எனும் சட்டத்தரணி கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை த்ரிஷா வழக்கமான கமர்சியல் சினிமா கதாநாயகியாக திரையில் தோன்றி ரசிகர்களை வசீகரிக்கிறார்.

சூர்யா – ஆர். ஜே. பாலாஜி ஆகியோருடைய கூட்டணியை கடந்து ரசிகர்கள் மீது ஒளிப்பதிவாளர் ஜி. கே. விஷ்ணுவும், அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் ஆதிக்கம் செலுத்தி, அவர்களது கவனத்தை கவர்கிறார்கள். காவல் தெய்வமான கருப்பசாமியின் திரை தோற்றத்திற்காக பிரத்யேக வண்ணத்தை பயன்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததுடன் பிரத்யேக உணர்வையும் அளிக்கிறது.

பிரபல நடிகர்கள் அனைவரும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். படத்தொகுப்பில் முதல் பாதியில் இருந்த அடர்த்தியும் வேகமும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.

நீதிமன்றத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிக்கலான நீதிமன்ற நடைமுறைகளின் ஊடாக உரிய நீதி கிடைக்காத தருணத்தில் அல்லது தேவையற்ற கால தாமதமாகும் தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக காவல் தெய்வமே சட்டத்தரணியாக வருகை தந்து வாதாடினால் எப்படி இருக்கும் என்ற ஆர். ஜே. பாலாஜியின் கற்பனைக்கு அவரே திரைக்கதை அமைத்து சூர்யாவை காவல் தெய்வமாக தோன்றச் செய்து செய்திருக்கும் கருப்பு திரைப்படம் – இந்த கற்பனையின் பின்னணியில் உள்ள சுவாரசியத்திற்காகவே ரசிகர்கள் விரும்புவார்கள்.

பினு கதாபாத்திரம் தமிழர்களின் விருப்பத்திற்குரிய உணவான பிரியாணியை பற்றியும்.. தான் அணிந்திருக்கும் ஆடை குறித்து நீதியரசர் நீதிமன்ற வளாகத்தின் ஆடை கட்டுப்பாடு குறித்து பேச.. அதற்கு இந்த கதாபாத்திரம் எதிர்வினை ஆற்றுவதும் ரசிக்க வைக்கிறது.

அரசியல்வாதியால் பாலியல் தொல்லைக்கு உட்பட்ட கண்மணி (ஷிவதா) எனும் கதாபாத்திரத்திற்கு.. தாமதமான நீதி வழங்கப்படுவதை வரவேற்கலாம்.

கருப்பு – நெருப்பு

Previous Post

குஜராத்தை 29 ஓட்டங்களால் வென்றது கொல்கத்தா

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures