இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் விற்கப்படும் இந்திய சினிமாக்களின் சிடிக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த கலைஞர்கள் இடம்பெறும் விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கும், இந்திய தயாரிப்புகள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்புவதற்கும் பாகிஸ்தான் அரசின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
அதேசமயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்படவில்லை. இதனிடையே, இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் கடைகளில் விற்கப்படும் இந்திய சினிமா சிடி, டிவிடிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது. இந்த நடவடிக்கை பாகிஸ்தான் முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அந்நாடு கூறியுள்ளது.