இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பத்து பிரதான கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் முதலாம் சுற்று இன்று நடைபெறவுள்ள சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் நிறைவு பெறுகிறது.
இந்தப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சீ ஹோக்ஸ் அணி ஏற்கனவே சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதிபெற்றுள்ளதுடன் புளூ ஈக்ள்ஸின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பு அற்றுப் போயுள்ளது.
ரட்னம் கழகத்துடனான நேற்றைய போட்டியில் புளூ ஸ்டார் வெற்றிபெற்று சுப்பர் சிக்ஸில் விளையாட தகுதி பெற்றதால் புளூ ஈக்ள்ஸ் தரமிறக்கல் சுற்றில் விளையாட நேரிட்டுள்ளது.
இன்றைய போட்டியில் சி ஹோக்ஸ் அணியை புளூ ஈக்ள்ஸ் வெற்றிகொண்டாலும் அது அவ்வணிக்கு ஆறுதல் அளிக்கும் வெற்றியாகவே அமையும்.
இந்த இரண்டு அணிகளில் சீ ஹோக்ஸ் பலம்வாய்ந்ததாக இருப்பதுடன் ஒரு போட்டியில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அப்கன்ட்றி லயன்ஸிடம் மாத்திரம் 0 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
City & Local Guides
நான்கு போட்டிகளில் வெற்றியீட்டிய சீ ஹோக்ஸ், 3 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டு 15 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 3ஆம் இடத்தில் இருக்கிறது.
புளூ ஈக்ள்ஸ் 3 வெற்றிகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு, 4 தோல்விகள் என்ற பெறுபேறுகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று 7ஆம் இடத்தில் இருக்கிறது.















