‘சட்டப்பேரவையில் நான் பேசும் போது யாரும் ஓடக்கூடாது என சத்தியம் செய்யுங்கள்’ என தமிழக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை – தீயணைப்புத்துறை – மீட்பு பணிகள் துறை- சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் அரசின் மீது கடுமையாக குற்றச்சாட்டினை சுமத்தினார். அத்துடன் ‘தவெக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி நான் முன் வைத்திருக்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முதல்வர் திங்கட்கிழமை அன்று பதிலுரை வழங்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் பேசுகையில், ” உறுப்பினர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் திங்கட்கிழமை விளக்கமாக பதில் அளிப்பேன். ஆனால் நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது என சத்தியம் செய்யுங்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதில்,
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் 29 ஆயிரத்திற்கும் கூடுதலான காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
- இந்த ஆண்டில் நியமிக்கப்படும் 10,000 காவலர்களில் 5000 பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
- போதை பொருள் ஒழிப்பை தடுக்கும் நோக்கத்தில் கிராமம் ஒன்றிற்கு பத்து லட்சம் ரூபாய் என 50 கிராமங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- காவல் துறையை நவீனமயமாக்க 212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- பணிக்காலத்தில் துணிச்சலுடன் போராடி மரணமடையும் காவலருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
- பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க கோரி முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.













