சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் மற்றும் ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் ஆகியவற்றில் புதிய போட்டி முறைமைகள் அறிமுகமாகின்றன.
2023இல் தலா 7 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களில் முதல் சுற்று நடத்தப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் சுற்றில் விளையாடின.
ஆனால், தென் ஆபிரிக்கா, ஸிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் கூட்டாக 2027இல் நடத்தப்படவுள்ள உலகக் கிண்ணப் போட்டியில் புதிய முறைமை அறிமுகமாகிறது.
ஆடவர் உலகக் கிண்ணத்தில் சுப்பர் சீரிஸ் முறை
ஆடவர் அணிகளுக்கான தரிவரிசையில் 12, 13, 14ஆம் இடங்களிலுள்ள அணிகள் சுப்பர் சீரிஸ் சுற்றில் முதலில் விளையாடும். அதில் முதலாம் இடத்தைப் பெறும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும்.
இரண்டாம் சுற்று தலா 6 அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களில் நடத்தப்படும். இதில் 30 போட்டிகள் நடைபெறும். அவற்றில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளும் இரண்டு குழுக்களிலும் அதிசிறந்த நான்காவது இடத்தைப் பெறும் அணியும் மூன்றாம் சுற்றான சுப்பர் 7 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் 21 போட்டிகள் நடத்தப்படும்.
இநத சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளுக்கு முன்னேறும்.
ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளுக்கு முன்பதாக இரண்டு நீக்கல் போட்டிகள்
2028இல் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிகளுக்கு முன்பதாக இரண்டு நீக்கல் போட்டிகளை ஐசிசி அறிமுகப்படுத்தி போட்டி முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் 2028 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த புதிய முறைமை அறிமுகமாகும்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றில் ஐந்து அணிகளைக் கொண்ட நான்கு குழுக்களில் முதல் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது. ஆனால், 2028இல் 4 அணிகளைக் கொண்ட ஐந்து குளுக்களில் முதல் சுற்று நடத்தப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
இதற்கு அமைய முதல் சுற்றில் முன்னர் விளையாடப்பட்ட 40 போட்டிகள் 30ஆக குறைந்துள்ளது.
முதல் சுற்று நிறைவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தலா 5 அணிகளைக் கொண்ட சுப்பர் 10 சுற்றில் விளையாடும். முன்னர் சுப்பர் 8 சுற்றாக இது நடத்தப்பட்டது.
சுப்பர் 10 சுற்று போட்டிகள் நிறைவில் இரண்டு குழுக்களிலும் முதலிடத்தைப் பெறும் இரண்டு அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
ஒவ்வொரு குழுவிலும் 2ஆம், 3ஆம் இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு நொக் அவுட் போட்டிகளில் விளையாடும்.
இரண்டு நொக் அவுட் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
12 அணிகள் நேரடி தகுதி
2028 ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன.
இணை வரவேற்பு நாடுகள் என்ற வகையில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து, 2026 ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் என்ற வகையில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, ரி20 தரவரிசையின் பிரகாரம் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய 12 அணிகள் நேரடியாக விளையாட தகுதிபெற்றுள்ளன.
எஞ்சிய எட்டு இடங்கள் 16 அணிகளுக்கு இடையிலான உலக தகுதிகாண் சுற்றின் மூலம் தீர்மானிக்கப்படும்.
இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய கனடா, இத்தாலி, நமிபியா, நேபாளம், நெதர்லாந்து, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய 8 அணிகளுடன் ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய வலயங்களிலிருந்து 2 தகுதிகாண் அணிகளும் அமெரிக்காக்கள் மற்றும் கிழக்கு ஆசியா/பசுபிக் வலயங்களிலிருந்து தலா ஒரு தகுதிகாண் அணியும் உலக தகுதிகாண் சுற்றில் விளையாடும்.













