ஈக்வடோருக்கு எதிராக மெக்ஸிகோ சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற பீபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்று போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மெக்ஸிகோ, 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டியிலும் எதிரணிக்கு ஒரு கோலையும் விட்டுக்கொடுக்காத மெக்ஸிகோ கோல் காப்பளாளர் ரோல் ரேஞ்சரின் ‘க்ளீன் ஷீட்’ தொடர்கிறது.

அவர் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் ஒரு கொலைத்தானும் விடவில்லை. மேலும் பல கோல் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தி இந்த வருட உலகக் கிண்ணத்தில் அதிசிறந்த கோல்காப்பாளராக விளங்குகிறார்.
உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில்
இரண்டாவது மிக இள வயது வீரர்
இந்தப் போட்டியில் மெக்ஸிகோ அணியில் 17 வயது வீரர் கில்பர்ட்டோ மோரா விளையாடியமை மற்றொரு விசேட அம்சமாகும்.
உலகக் கிண்ண நொக் அவுட் சுற்று வரலாற்றில் பிரேஸில் விற்பன்னர் பேலேக்கு அடுத்ததாக இரண்டாவது மிக இள வயதில் முதல் பதினொரு வீரரகளில் ஒருவராக விளையாடியவர் என்ற பெருமையை மோரா பெற்றுக்கொண்டார்.

1958 பீபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் பேலே விளையாடியபோது அவரது வயது 17 வருடங்கள் 235 நாட்களாகும்.
2026 பீபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் ஈக்வடோருக்கு எதிரான போட்டியில் விளையாடிய மோராவின் வயது 17 வருடங்கள் 240 தினங்களாகும்.
ஒட்டுமொத்தத்தில் உலகக் கிண்ணத்தில் மிக இள வயதில் விளையாடியவர்கள் வரிசையில் ஆறாவது இடத்தில் மோரா இருக்கிறார்.
மெக்ஸிகோவின் வெற்றி தொடர்கிறது
பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தை கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கூட்டாக நடத்தி வரும் மெக்ஸிகோ தனது சொந்த மண்ணில் தொடர்ந்து வெற்றியீட்டி வருகிறது.
இதன் மூலம் 1990இல் இத்தாலிக்குப் பின்னர் முதல் நான்கு போட்டிகளில் வெற்றியீட்டிய முதலாவது வரவேற்பு நாடு என்ற பெருமையை மெக்ஸிகோ பெற்றுக்கொண்டது.
முதல் சுற்றில் தென் ஆபிரிக்கா (2 – 0), தென் கொரியா (1 – 0), செச்சியா (3 – 0) ஆகிய அணிகளை வெற்றிகொண்ட மெக்ஸிகோ, இப்போது நொக் அவுட் சுற்றில் ஈக்வடோரை 2 – 0 என வெற்றிகொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மெக்ஸிகோ சார்பாக ஜூலியன் குவினோன்ஸ் (22 நி.), ரோல் ஜிமினெஸ் (31 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.
இப் போட்டியின் உபாதையீடு நேரத்தில் ஈக்வடோர் வீரர் பியரோ ஹின்காப் அநாவசியமாக சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
16 அணிகள் சுற்றில் இங்கிலாந்து அல்லது கொங்கோவை மெச்ஸிகோ ஜூலை 6ஆம் திகதி எதிர்த்தாடும்.












