கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல் பட்டு வருகிறது. விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என்று அறிவித்து கொண்டு ஆசிரமங்களை தொடங்கினார்.
கல்கி ஆசிரமங்களுக்கு சென்னை, ஆந்திரா, கர்நாடகா என நாடு முழுவதும், வெளி நாடுகளிலும் கிளைகள் உள்ளன. இங்கு காணிக்கை, சிறப்பு பூஜை என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே போல் கல்கி விஜயகுமாரின் மகன் பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், கல்கி ஆசிரமங்களில் அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமானவரி துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 16 ஆம் திகதி சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
4-ஆவது நாளாக நேற்றும் கல்கி ஆசிரமத்தில் தொடர்ந்து சோதனை நடத்தினர். இதில் ரூ.43 கோடியே 90 லட்சம் பணம், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர், 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள், ரூ.5 கோடி மதிப்புள்ள வைர கற்கள், மேலும் கணக்கில் வராத ரூ 500 கோடிக்கு மேல் பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.