வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து கந்தசாமி சதீஸ் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரதிவாதிகளாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
குறித்த மனு இன்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளை வழங்கினார்.
மனுதாரரின் இடைக்கால நிவாரணமான, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிமன்றம், வரும் 14 நாள்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது.
வழக்கு விசாரணை வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் பிரதிவாதிகள் மன்றில் முன்னிலையாகி தமது பதிலைச் சமர்ப்பிக்க மன்று அழைப்பாணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

