நெதர்லாந்துக்கு அகதியாக குடிபெயர்ந்தபோது, சிறிய பைக் ஒன்று பரிசளித்தவரை 24 ஆண்டுகளுக்கு பின் பெண் ஒருவர் இணையதள வாயிலாக கண்டுபிடித்து நன்றி தெரிவித்துள்ளார்.
லண்டனில் வசிக்கும் மேன் பாப்பக்கர் (Mevan Babbakar) என்ற 29 வயதான பெண், அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை கண்டுபிடிக்க உதவுங்கள் என பதிவிட்டிருந்தார்.
மேலும் தான் 5 வயதில் அகதியாக ஈராக்கிலிருந்து நெதர்லாந்து சென்றபோது, ஸ்வொல்லே (Zwolle) என்ற இடத்திலிருந்த அகதிகள் முகாமில் அவர் தங்கி,வேலை பார்த்ததாகவும், தனக்கும் தனது தாய்க்கும் இரு பைக்குகளை பரிசளித்த அவரை பார்க்க விரும்புவதாகவும் அதில் கூறியிருந்தார்.
இளம்பெண்ணின் ஆவலை புரிந்துக்கொண்ட வலைதளவாசிகள், அந்த பதிவை, 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறை மறுபதிவிட்டு, இறுதியாக அந்த நபரை கண்டுபிடிக்க உதவினர். இந்நிலையில், தான் தேடிய நபரை கண்டுபிடித்து விட்டதாக கூறி, அவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட மேன் பாப்பக்கர், அவரது பெயர் எக்பர்ட் என்றும், ஜெர்மனியில் அவரை கண்டுபிடித்ததாகவும் கூறியிருந்தார்.
மேலும், எக்பெர்ட் தன்னை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறியிருந்த மேன் பாப்பக்கர், கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை அகதிகளுக்கு உதவி செய்யும் பணியில் எக்பெர்ட் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

