டிசி -DC திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
நடிகர்கள் : லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா, கிரீஷ் தயாள், கஸ்தூரி ராஜா, தலைவாசல் விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
மதிப்பீடு : 2.5 /5
‘தமிழ் சினிமாவின் குவென்டின் ட்ரான்டினோ’ என தம்மை பலரும் அடையாளப்படுத்தவேண்டும் என்பதால் தன்னுடைய படைப்புகளில் ( ராக்கி – சாணி காயிதம் – கேப்டன் மில்லர்) வன்முறையை அதீதமாக இடம்பெறச் செய்து, அதனை தொடர்ந்து கொண்டாடி வரும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் ‘டி சி’. தேவதாஸ்- சந்திரா என்ற பெயரின் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தை… படத்தின் தலைப்பாக கொண்டு வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் – ரசிகர்கள் வழக்கம் போல் போதை ஏறிய ஆசாமியின் சைக்கோத்தனத்தைப் போல் மாறினார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
காவல்துறையினருக்கு சொந்தமான ஆயுதங்களை சிறையிலிருந்து தாஸ் ( லோகேஷ் கனகராஜ்) தலைமையில் வெளியே வந்த கும்பல் கொள்ளையடிக்கிறது. இதற்காக காவல்துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் சோதனை தடுப்பு ஒன்றை அமைத்து தணிக்கை சோதனையில் ஈடுபடுகிறார்கள். இந்தக் தருணத்தில் தன்னுடைய பிள்ளையை ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார் பாடசாலையில் சேர்ப்பதற்காக இந்திய மதிப்பில் ஏழு லட்சம் ரூபாயை தன்னுடன் எடுத்துச் செல்லும் ஒரு எளிய பாமரன் காவல் துறையின் சோதனையில் குடும்பத்துடன் சிக்குகிறார். அவரிடம் இருந்த பணத்தை காவல்துறையினர் கொள்ளை அடிப்பதுடன், அவரை கல்லால் அடித்து கொன்று விடுகிறார்கள். இதனால் செய்வது அறியாது தவித்த அந்த பிள்ளை இது தொடர்பாக தாஸிடம் புகார் கூறுகிறார். தாஸ் இது தொடர்பான விசாரணையில் இறங்கி உண்மையை கண்டறிந்த உடன் பாமரனை கொலை செய்த காவல் அதிகாரியை கொன்று விடுகிறார். காவல்துறை உயர் அதிகாரிகள் ஒன்று கூடி ஆயுதக் கொள்ளை + காவலர் கொலை+ என இரண்டு குற்றங்களை செய்திருக்கும் தாஸ் என்பவரை தேடி கொன்று விடுங்கள் என உத்தரவிட… அதை போஜராஜ் ( கிரீஷ் தயாள்) எனும் காவல் அதிகாரியின் தலைமையில் ஒரு குழு புலன்விசாரணையை தொடங்குகிறது. இந்தத் தருணத்தில் சூழலால் குற்றவாளியாகி சிறை தண்டனை பெற்ற தாஸ் சிறையில் கிடைத்த நட்பின் காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார். ஆனால் அவருக்கும்.. இந்த அடையாளத்தை தொலைத்து விட்டு சாதாரண இல்லற வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்புகிறார். இத்தகைய தருணத்தில் இவர் குற்ற சம்பவத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சென்னைக்கு செல்கிறார். அங்கு மதுபானக்கூடம் ஒன்றில் பாடகியாக இருக்கும் பார்வதி( சஞ்சனா ) என்ற பெண்ணை விரும்புகிறார். காதலை சொல்வதற்கு முன் துப்பு கிடைத்து காவல்துறையினர் இவர் மீது துப்பாக்கி சூடு நடத்த.. அதில் அந்தப் பெண் இறக்கிறார். இதனால் காவல்துறை அதிகாரி மீது வெறுப்பும்… பழிவாங்க வேண்டும் என்று உணர்வும்… தாஸிற்கு எழுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் தாஸ்.. தன்னைப் பற்றி துப்பு சொல்லி பார்வதியின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்..பாலியல் விடுதிக்கு வழக்கம் போல் வருகை தருபவர் என்பதால் அவரை அங்கு வைத்து தீர்த்து கட்டுவதற்கு திட்டமிடுகிறார் தாஸ். இதற்கு அங்கு பணியாற்றும் பாலியல் தொழிலாளியான சந்திராவின் அறைக்கு செல்கிறார். அவருடைய சுய சரிதையை கேட்டவுடன் அங்கிருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என திட்டமிடுகிறார். மீண்டும் அவர் வன்முறையை கையாண்டு அங்கிருந்து சந்திராவை வெளியே கொண்டு வந்து, ‘எங்கேனும் சென்று வாழ்’ என சொல்கிறார். ‘எமக்கு யாரையும் தெரியாது. உன்னுடன் இருக்கிறேன் ‘ என்று அவருடன் பயணப்பட தொடங்குகிறார். தொடர்ந்து பலமுறை காவல்துறையின் வலையலிருந்து தப்பித்ததால்.. போஜராஜ் தலைமையிலான காவல்துறையினர் குழு தாஸ் – சந்திரா ஆகிய இருவரையும் கொலை செய்து விட திட்டமிடுகிறது. இதன் பிறகு காவல்துறை – குற்றவாளிகள் இருவருக்குமான மோதலாக தொடர்கிறது. இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதுதான் இப்படத்தின் கதை.
தவறு செய்பவர்கள் காவல்துறையினராக இருந்தாலும்… அதற்கு எதிராக வன்முறைத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் சிறை கைதியான தாஸ் மரண தண்டனைக்குரிய குற்றவாளி என காவல்துறை ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது. அதே தருணத்தில் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஆயுதத்துடன் களம் இறங்கும் நாயகனின் கதாபாத்திரம்.. என இரண்டு வித தோற்றத்தைக் கொண்ட கதாபாத்திரத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். அததுடன் அதீதமான வன்முறையை திரையில் நிகழ்த்துவதற்கு பொருத்தமான கதையையும் இயக்குநர் தெரிவு செய்திருக்கிறார்.
இதில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதால்..அவரது கதாபாத்திர வடிவமைப்பும்.. எழுத்தும்.. பல உளவியல் சார்ந்த குறைகள் இருந்தாலும்… அதனை மறைத்து தன்னுடைய இறுக்கமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார் அறிமுக எக்சன் ஹீரோ லோகேஷ் கனகராஜ். எக்சன் காட்சிகளில் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திர தாக்கம் சில இடங்களில் வெளிப்படுகிறது. ஷட்டிலான நடிப்பு – வசன உச்சரிப்பில் தனித்துவம்- சிகை அலங்காரத்திலும்.. உடை அலங்காரத்திலும் தனி கவனம். என அனைத்தையும் சிறப்பாக செய்து ரசிகர்களை கவர்கிறார் நடிகர் லோகேஷ் கனகராஜ்.
மதுபான கூடத்தில் பாடகியாக தோன்றும் பார்வதி கதாபாத்திரத்திற்கும் தாஸ் கதாபாத்திரத்திற்கும் இடையேயான காதல் ரசனையானது. புறக்கணிக்கப்பட்ட இரு பாலினங்களுக்கு இடையேயான புரிதலுடன் கூடிய அன்பாக பரிணமிக்கிறது. ஆனால் இங்கும் இயக்குநர் தன் வன்முறை சிந்தனையை புகுத்த தவறவில்லை.
இதைத் தொடர்ந்து பாலியல் தொழிலாளியான சந்திரா- எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடியும் அதிலிருந்து பீறிட்டு எழ வேண்டும் என்ற உணர்வும் நுட்பமாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருக்கிறது. அந்த கதாபாத்திரம் எப்போதும் தன்னுடன் நெகிழியாலான ரோஜா மலரை வைத்திருக்கும் குறியீடு கவனம் ஈர்க்கிறது. தேவதாஸ் கதாபாத்திரத்தின் மூலம் புதிய வாழ்க்கையை- உலகத்தை- காணும் சந்திராவின் உணர்வு ரீதியான வெளிப்பாடு…. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதில் நடிகை வாமிகா கபியின் நடிப்பு விருதுக்குரியது.
இந்த மூன்று முதன்மையான கதாபாத்திரங்களை கடந்து போஜராஜ் – தேவதாசின் தந்தை – காவலர் அஷ்ரப் – ஆகிய கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது.
அதீத வன்முறை இருந்தாலும்… முதிர்ச்சியான காதல் இருந்தாலும்.. இவற்றை தன்னுடைய அற்புதமான இசையாலும்… நேர்த்தியான ஒளிப்பதிவாலும்… அற்புதமான படத் தொகுப்பாலும்… ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார்கள் தொழில்நுட்பக் கலைஞர்களான அனிருத் – முகேஷ் ஜி – ஜிகே பிரசன்னா. இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம்.
எளிய மக்களின் வன்முறையை காவல்துறையும், சட்டமும் மரண தண்டனைக்குரிய குற்றமாக கருதக்கூடாது என்பதை வலியுறுத்த முயற்சித்திருக்கும் டிசி- DC ஒரு பிரிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
டிசி – வயலென்ட் ஸ்ப்ரீ












