ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பொருத்தமான தகுதியான வேட்பாளரை கண்டுள்ளோம் எனவும், இது தொடர்பான அறிவிப்பு பொருத்தமான தருணத்தில் வெளியிடப்படும் எனவும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஏழைகளின் வியர்வைத் துளிகளின் வாசம் அறிந்த மண்ணோடு போராடும் மக்களின் கஷ்டங்களை உணர்ந்த ஒரு மண்ணின் மைந்தனே எமக்குத் தேவை எனத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர், அவரை நாங்கள் இனங்கண்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் பலவும் பிரதமருக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக திட்டமிட்ட பொய்களையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றன. நாங்கள் அவர்களை பழிவாங்கவோ, அடிக்கவோ, துன்புறுத்தவோ, தீவைக்கவோ மாட்டோம். எமது பொறுப்புக்களை மக்களுக்காக நேர்மையாக நிறைவேற்றுவதே எமது கடமையாகும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

