‘ஒபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கைக்குப் பின், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா முதன்முறையாக அழைப்பு விடுத்துள்ளது.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு புதுடெல்லியில் எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கடந்த 20ஆம் திகதி அறிவிப்பொன்றை வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஆண்டு இறுதியில் முதன்முறையாக நடைபெறவுள்ள நாகரிகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைக் கருத்தரங்கில் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், குறித்த கருத்தரங்கில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
பலதரப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விடுக்கப்படும் அழைப்புகளுக்கும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளுக்கும் இடையில் தொடர்பில்லை என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய மற்றும் கலாசார அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 2023ஆம் ஆண்டு மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடும் பதற்றம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு மே 7ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன்போது பயங்கரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருந்தது.
அண்மையில் தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரச தலைவர்கள் சபைக் கூட்டத்திலும் இந்தியா–பாகிஸ்தான் உறவுகள் தொடர்பான கருத்துகள் வெளிப்பட்டன.
அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான இஷாக் தார் முன்னிலையில் உரையாற்றிய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நாடுகள் கூட்டாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டு, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.













