எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், நாடு தற்போது ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருள் இருப்பையே நம்பியுள்ளது என்றும், இந்த நிலையில் விலைகளை திருத்துவது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உலகளாவிய விலை மாற்றங்கள்
தற்போதைய விலைகளில் எரிபொருளை விற்பனை செய்வதில் சில விநியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட அமைச்சர், அவர்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் மூன்று மாத காலத்திற்குச் சலுகைகளை வழங்கியிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்காக திறைசேரியிலிருந்து மொத்தம் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான எதிர்கால முடிவுகள் உலகளாவிய விலை மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறிய அமைச்சர், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கின்றனவா என்பதை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.












