தமிழ் மக்களின் தாயகம் முழுமையாக சுருங்கி இல்லாமல் போகும் வரையில் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா? உலக நாடுகள் தம் சுய அரசியலுக்காக எமை கைவிடும் சமயத்தில் ஒரு அறவழிப் போறாட்டக் களத்தை நாம் திறக்க வேண்டும்.
தமிழ் மக்களின் துயரங்களை துடைக்கவோ, தமிழ் மண்ணில் ஸ்திரமான அரசியல் ஒன்றை பிரஸ்தாபிக்கவோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கிறது என்ற மக்களின் சந்தேகம் இன்னும் வலுக்கிறது.
அத்துடன் காலம் காலமாக மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்ற வேலைகளில் சில நாடுகள் ஈடுபடுகின்றமை பெரும் வருத்தம் தருபவை. தமது வரலாற்றுக் கடமையில் இருந்து விலகுவதன் மறுவினையை அவர்களே ஓருநாள் உணரக்கூடும்.
எவ்வாறென்றாலும் இனத்தின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் போராடுகின்ற ஈழத் தமிழ் மக்கள் ஒருபோதும் அதிலிருந்து பின்வாங்க முடியாது. ஏனென்றால் அது நம் இருப்போடும் எதிர்காலத்தோடும் நிலைத்தவை.
இந்த நிலையில் போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்ற போதும் தமிழ் தாயகத்தில் ஒரு அரசியல் தீர்வு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஸ்ரீலங்கா அரசு தவறி வருகிறது. தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறது.
இந்த நிலையில் பறிபோகும் வடக்கு கிழக்கை பாதுகாக்கவும் தமிழர்களின் அரசியல் உரிமையை வெல்லவும் ஸ்ரீலங்காவுக்கு மாத்திரமின்றி அனைத்து நாடுகளுக்கும் இடித்துரைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறவழிப் போராட்டங்களை நடாத்த வேண்டும்.
அண்மைய காலத்தில் ஆரோக்கியமான நகர்வுகளை மேற்கொள்ளும் முன்னணி, கடந்த தேர்தலில் மக்கள் அவர்களை மாற்றீடாக தேர்வு செய்தமையின் பெறுபேற்றை வழங்க அறவழியில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.
அதன் வாயிலாக ஸ்ரீலங்கை வரலாற்றை மாற்றுவதுடன் தமிழ் மக்களின் உரிமை வெல்லும் புதிய தலைவிதியை எழுதவும் பெரும்முனைப்பு காட்ட வேண்டும் என்பதை என்றுமே தாயக நினைவுகள் மிகுந்த உறவாக புலம்பெயர் மண்ணில் இருந்து வலியுறுத்துகிறேன்.
கிருபா பிள்ளை
#No 1 TamilWebSite
| http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]












