தொழிற்சங்க உரிமைகள் மற்றும் மற்றும் ஜனநாயகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ‘நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்;’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றை எந்தவித திருத்தங்களும் இன்றி முழுமையாக மீள பெற வேண்டும் என வலியுறுத்தி சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்குமாறும் புதிய சட்டமூலங்கள் ஊடாகத் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் மக்கள் குரல்களை முடக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் சில திருத்தங்களுடன் இச்சட்டமூலங்களை மீண்டும் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ள போதிலும் அவற்றின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் அடக்குமுறைத் தாக்கங்கள் காரணமாகவே இவற்றை முழுமையாக எதிர்க்கவுள்ளதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனவே இச்சட்டமூலங்களை எதிர்த்து பரந்த மக்கள் முன்னணி ஒன்றை உருவாக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனுபா நந்துல ((சிரேஷ்ட உப தலைவர், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம்), ஜோசப் ஸ்டாலின் (பொதுச் செயலாளர், இலங்கை ஆசிரியர் சங்கம்), டானி, சதுர சமரசிங்க (பொதுச் செயலாளர், இலங்கை தோட்டப் பணப்பாதுகாப்புச் சங்கம்), அன்டன் மார்க்கஸ் (இணைச் செயலாளர், சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் சங்கம்) மற்றும் எஸ். அமரசிங்க (செயலாளர், வணிக மற்றும் தொழில்துறை ஊழியர்கள் சங்கம்) உள்ளிட்ட பிரதான பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வின் ஊடாக நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும்; மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலங்களில் எத்தகைய திருத்தங்களும் போதாது என்பதால், அவற்றை எந்தவித சமரசமுமின்றி முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.
சாதாரண தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைக் குரல்களைப் பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் சட்டப்பிரிவுகளை முற்றிலுமாக நீக்குதல்.
இச்சட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகச் சுதந்திரத் தொழிற்சங்கங்கள், மக்கள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படவுள்ளன.














