சத்துருக்கொண்டான் படுகொலை இடம்பெற்று 37 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த படுகொலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரி தொடர்பிலும் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சத்துருக்கொண்டான் படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து, சாணக்கியன் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் முன்வைத்த கேள்விக்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்துள்ளார்.
1990 செப்டெம்பர் 9ஆம் திகதி, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் 186 பேர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த குழந்தை வடிவேல் என்பவர் 2025 செப்டெம்பர் 27ஆம் திகதி கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த படுகொலையின் பின்னணியில் வர்ண குலசூரிய என்ற இராணுவ அதிகாரி இருப்பதாகக் குழந்தை வடிவேல் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், முறைப்பாட்டில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் பதிலாக, முறைப்பாட்டாளரிடம் விசாரணை நடத்தப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா, செனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழங்கும் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஏன் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சத்துருக்கொண்டான், குமுதினிப் படகு மற்றும் வந்தாறுமூலை உள்ளிட்ட பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கடந்தகால படுகொலைகள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ஆனந்த விஜேபால வழங்கிய பதில்
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 2025 செப்டெம்பர் 27ஆம் திகதி முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், முறைப்பாட்டாளரிடம் வாக்குமூலம் பெறுவதற்குப் பொலிஸார் பல முறை அழைப்பு விடுத்தும் அவர் முன்னிலையாகவில்லை எனவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாட்டாளரைத் தேடிச் சென்று இரண்டு தடவைகள் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டை கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் 2025 நவம்பர் 21ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தொடர்ந்து, 2025 டிசெம்பர் 6ஆம் திகதி இம்முறைப்பாடு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டங்கள் தொடர்பில், செனல் 4 தொலைக்காட்சி சேவையில் வெளியான தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1979 – 2009 காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள்
1979 முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் துல்லியமான தரவுகள் கிடைக்கப்பெறாத நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிபரங்களின்படி:
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் : மொத்தம் 148 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 95 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 34 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 19 சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
மனிதப் படுகொலைச் சம்பவங்கள்: மொத்தம் 1,104 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 541 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 94 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 469 சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
கூட்டுப் படுகொலைச் சம்பவங்கள்: மொத்தம் 413 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 397 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 13 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று சம்பவங்களின் விசாரணைகள் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
ஏனைய பாரதூரமான குற்றச்சம்பவங்கள்: மொத்தம் 139 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 123 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 6 சம்பவங்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 10 சம்பவங்களின் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரி மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துத் தெளிவான விளக்கம் அமைச்சரின் பதிலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், கடந்தகாலப் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் தொடர்ந்து கேள்விகள் எழுந்துள்ளன.













