ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் தற்போது நடைபெற்றுவரும் 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக முதலாவது போட்டியாளராக பங்குபற்றிய நீச்சல் வீராங்கனை யாழிந்தி மினாகி ரூபசிங்க நான்காம் இடத்தைப் பெற்று தகுதிகாண் சுற்றுடன் வெளியேறினார்.
பிரித்தானிய நேரப்படி இன்று முற்பகல் 11.40 மணிக்கு நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் மல்லாக்கு (Backstroke) நீச்சலுக்கான முதலாவது தகுதிகாண் போட்டியை 2 நிமிடங்கள், 22.14 செக்கன்களில் நிறைவுசெய்த யாழிந்தி மினாகி, நான்காம் இடத்தைப் பெற்றார்.
முதலாவது தகுதிகாண் போட்டியில் நீச்சலுக்கு பெயர்பெற்ற அவுஸ்திரேயாவின் ஹனா ப்ரெடரிக்ஸ் (2:09.81), வட அயர்லாந்தின் லொட்டி குலன் (2:12.23), கனடாவின் மெடிசன் கிரிஜர் (2:12.36) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
இந்தப் போட்டியில் முதல் 50 மீற்றரை 5ஆவது இடத்தில் நிறைவுசெய்த யாழிந்தி மினாகி அடுத்த மூன்று 50 மீற்றர்களில் நான்காம் இடத்திலேயே இருந்தார்.
மூன்று தகுதிகாண் சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் 18 வீராங்கனைகள் பங்குபற்றியதுடன் யாழிந்தி மினாகி ஒட்டுமொத்த நிலையில் 13ஆம் இடத்தைப் பெற்றார்.
அவர் 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல், 100 மீற்றர் சாதாரண நீச்சல் (Freestyle) ஆகிய போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார்.










