பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ பே அரினா விளையாட்டரங்கில் புதன்கிழமை (1) நடைபெற்ற பீபா உலகக் கிண்ண 32 அணிகள் சுற்று போட்டியில் பத்து வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டபோதிலும் ஐக்கிய அமெரிக்கா 2 – 0 என வெற்றிபெற்று 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது.
பதினாறு அணிகள் சுற்றில் பெல்ஜியத்தை ஐக்கிய அமெரிக்கா எதிர்த்தாடும்.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவுக்கும் இடையிலான போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதால் போட்டியில் பரபரப்பு காணப்பட்டது.
சொந்த நாட்டில் விளையாடும் அமெரிக்கா போட்டியின் 45ஆவது நிமிடத்தில் போலாரின் பெலோகன் மூலம் கோல் போட்டு இடைவேளையின்போது முன்னிலை அடைந்தது.
இடைவேளைக்குப் பின்னர் இதே வீரர் முரட்டுத்தனமாக விளையாடியமை தொலைக்காட்சி உதவி மத்தியஸ்தர் (VRA) மூலம் உறுதிசெய்யப்பட்டு உடன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி வரலாற்றில் கோல் போட்ட பின்னர் தேவையில்லாத வகையில் சிவப்பு அட்டைக்கு இலக்கான நான்காவது வீரர் பெலோகன் ஆவார்.
இதற்கு முன்னர் கெரின்ச்சா (பிரேஸில் 1962 – அரை இறுதி), ரோனால்டின்ஹோ (பிரேஸில் 2002 கால் இறுதி), ஸினேடின் ஸ்டேன் (பிரான்ஸ் 2006 – இறுதிப் போட்டி) ஆகியோர் அநாவசியமான வம்புகளில் சிக்கி சிவப்பு அட்டைக்கு இலக்காகி இருந்தனர்.
போலாரின் பெலோகன் வெளியேற்றப்பட்டதன் காரணமாக கடைசி 36 நிமிடங்களுக்கு 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்ட அமெரிக்கா அழுத்தத்தையும் எதிர்கொண்டது.
இதனை சாதகமாக்கிக்கொள்ள பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா கடும் முயற்சி எடுத்துக்கொண்டது. ஆனால், அமெரிக்காவின் தடுத்தாடால் வியூகத்தை பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவினால் ஊடறுக்க முடியாமல் போனது.

போட்டியின் 82ஆவது நிமிடத்தில் மாலிக் டில்மான் ப்றீ கிக் மூலம் அற்புதமான கோல் ஒன்றைப் போட்ட பின்னரே அமெரிக்கா அழுத்தத்திலிருந்து மீண்டது.
அதன் பின்னர் தாக்குப்பிடித்து விளையாடிய அமெரிக்கா 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.













