ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கும் இந்திய ஏ அணிக்கும் இடையிலான இரண்டாம் சுற்று ஒருநாள் போட்டி சம நிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் குகதாஸ் மாதுளனின் துல்லியமான பந்துவீச்சு இலங்கை ஏ அணிக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 265 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
சுப்பர் ஓவரில் அர்ஷாத் கானின் பந்துவீச்சை எதிர்கொண்ட சஹான் ஆராச்சிகே (6), அவிஷ்க பெர்னாண்டோ (7) ஆகிய இருவரும் 16 ஓட்டங்களைப் பெற்றனர்.
17 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு குகதாஸ் மாதுளனின் பந்துவீச்சை எதிர்கொண்ட அதிரடி ஆட்டக்காரர்கள் சூரியான்ஷ் ஷெஜ் (3), வைபவ் சூரியவன்ஷி (6) ஆகியோரால் 9 ஓட்டங்களையே பெற முடிந்தது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.
முன்வரிசை மற்றும் மத்தியவரிசை வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.
ப்ரப்சிம்ரன் சிங் (11), வைபவ் சூரியவன்ஷி (21), ருத்துராஜ் கய்க்வாட் (37), திலக் வர்மா (23), அயூஷ் படோனி (15), நிஷாந்த் சிந்து (6), அனுக்குல் ரோய் (8) ஆகிய எழுவர் 143 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக இந்திய ஏ அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.


எனினும் 7ஆம் இலக்க வீரர் சூரியான்ஷ் ஷெஜ், 9ஆம் இலக்க வீரர் விப்ராஜ் நிகம் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 8ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
சூரியான்ஷ் ஷெஜ் 72 ஓட்டங்களையும் விப்ராஜ் நிகம் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.


பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் ஷிராஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை சமப்படுத்தியது.

சதீர சமரவிக்ரம மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 93 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டம் இழந்தார்.
அவரைவிட நிரோஷன் திக்வெல்ல 37 ஓட்டங்களையும் வனுஜ சஹான் 25 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 22 ஓட்டங்களையும் விஜயகாந்த் வியாஸ்காந்த், சாமிக்க குணசேகர ஆகிய இருவரும் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அயூஷ் படோனி 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.












