நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் மேலும் கூறுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அரசியல் கட்சி செயற்பாட்டாளர்களான மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஷ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை அரசியல் ஒடுக்குமுறையாகும்.
அரசியல் எதிர்ப்புக் கொள்கை கொண்டுள்ளவர்களை முடக்குவதற்கு பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது.
இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.













