நாடு மீண்டுமொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில், அதற்கு அவசரகால தேசியத் தீர்வுகளை வகுப்பதற்காகத் துரிதமாக சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் முறைப்படி வேண்டுகோள் விடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தரப்புகளின் அவசரச் சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
நமது நாடு மீண்டுமொரு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போது வேகமாகச் சரிந்துவரும் ரூபாவின் பெறுமதி, அதிகரித்து வரும் செலவீன அழுத்தங்கள் மற்றும் பெருகிவரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை என்பன இனியும் ஒரு தரப்பினரை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையாகக் கருத முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே இந்நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாக, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான அவசரகால தேசியத் தீர்வுகளை ஒன்றிணைந்து வகுப்பது அவசியமாகும். இதற்காகத் துரிதமான முறையில் சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் முறைப்படி வேண்டுகோள் விடுப்பதற்கு நாம் இங்கு ஒருமனதாகத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

