காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார்.
அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது.