ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் .பெட்ரிகோ விலிகஸை சந்தித்துக் கலந்துரையாடியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரடங்கிய இலங்கையின் உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் அவரிடம் மீளவலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய அரச உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு கடந்த செவ்வாய்கிழமை ஜெனிவா பயணமானது.
ஜெனிவாவில் 12 ஆம் திகதி திங்கட்கிழமை மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருப்பதுடன் இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு, இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில தினங்கள் முன்னதாகவே ஜெனிவாவை சென்றடைந்த இலங்கையின் அரச உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அந்தவகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெட்ரிகோ விலிகஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரடங்கிய இலங்கைப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் முயற்சிகள் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதுமாத்திரமன்றி இதன்போது உள்ளகப்பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் மீளவலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.