ஹேரத், லாக்ஷன் மிரட்டல்: 203 ஓட்டங்களில் சுருண்டது அவுஸ்திரேலியா
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இதில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலயில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களில் சுருண்டது. அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலிய அணி சார்பில், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஓ’கீபே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
2வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி அறிமுக வீரர் லாக்ஷன் சந்தகன், அனுபவ வீரர் ரங்கண ஹேரத் ஆகியோரின் அபார பந்துவீச்சில் சிக்கியது.
இதனால் அந்த அணி முதல் இன்னிங்சில் 203 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. அந்த அணித்தரப்பில் ஆடம் வோகஸ் 47 ஓட்டங்கள், அணித்தலைவர் சுமித் 30 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை பந்து வீச்சாளர்களில் ரங்கண ஹேரத் மற்றும் லாக்ஷன் சந்தகன் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
பின்னர் 86 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, ஒரு விக்கெட்டை இழந்து 6 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.