உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், வருகிற 26ந் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் புரமோசன் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் அவெஞ்சர்ஸ் ஆன்தம் ஆல்பத்தை உருவாக்கி அதில் ஆடி, பாடியுள்ளார். இந்த ஆன்தம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழ் ஆன்தெம் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார், அயர்மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார், பிளாக் விடோ கேரக்டருக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளார். மற்ற கேரக்டர்களுக்கும் தமிழின் முக்கியமான நடிகர், நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர்.
இதன் அறிமுக விழாவில் பேசிய ஏ.ஆர்.ரகுமான் “அவெஞ்சர்ஸ் மாதிரியான படம் இந்தியாவிலும் விரைவில் தயாராகும். அவெஞ்சர் பற்றி தெரியாதவர்களுக்கு எனது ஆல்பம் உதவும். இதில் நான் பாடி, ஆடியிருப்பதால் சினிமாவில் நடிக்க தயாராகிறேன் என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு எண்ணமே இல்லை” என்றார்.