இதுவரை 62 படங்களில் நடித்திருக்கும் நடிகர் விஜய், தமிழ் பட உலகில் இருக்கும் பிரபல இயக்குநர்கள் பலர் இயக்கத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், காதல் காவியம் எடுப்பதில் பிரபலமானவராக இருக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் படத்தில் மட்டும் அவர் நடித்ததில்லை.
இதற்கான வாய்ப்பு, 2012ல் வந்தது. யோகன் என்ற படத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானதோடு, அது தொடர்பான போஸ்டர்களும் அப்போது வெளியிடப்பட்டன. ஆனால், அந்தப் படம், துவக்க நிலையிலேயே நின்று போனது.
இப்போது, அது தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் படம் என்றதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார். எப்போதுமே, முழுக் கதையையும் கேட்டு முடித்த பின், படத்துக்கான கதையில் முழு திருப்தி இருந்தால் மட்டுமே, நடிகர் விஜய் குறிப்பிட்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். அதேபோலவே, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் யோகன் படக் கதையை கேட்டிருக்கிறார். 75 சதவீத கதையை மட்டும் கூறிய கவுதம் வாசுதேவ் மேனன், மீதி கதையை சொல்வதாகச் சொன்னவர், பின், கதையை முடிக்காமல் விட்டு விட்டார். இதனால், யோகன் படம், கதை கேட்டதோடு நின்று போய் விட்டது. இதுதான், யோகன் நின்று போன கதை.