வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு இன்று சனிக்கிழமை (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று பகல் 3 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் அன்னாரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, இந்நிகழ்வு ஆரம்பமானது.
அதன் பின்னர், மணிக்கூட்டு கோபுரம் சதுக்கத்தை சுற்றி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கான மக்கள், அங்கு வீற்றிருக்கும் தமிழ் மும்மன்னர்களுக்கும் அஞ்சலி செலுத்தி நிகழ்வின் ஏற்பாட்டு மண்டபத்தை சென்றடைந்த நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு மாநாடு தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தந்தை செல்வாவின் உருவப் படத்துக்கு மட்டக்களப்பு ஆதீன முதல்வர் அகத்தியர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மாநாட்டில் இந்து, கிறித்தவ மத குருமார்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன், யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


















