கொலையுதிர் காலம் படத்தின் டிலைர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாராவை பற்றி மறைமுகமாக விமர்சித்தார். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் கே.ஆர்.விஜயா தான் நடிப்பார். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்றாகி விட்டது. பார்த்தவுடன் கும்பிடுவது போல இருப்பவர்களும், பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் ரசிகர்கள் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றார்.
ராதாரவியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. விக்னேஷ் சிவன், சின்மயி, விஷால், நடிகர் சங்கம், வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக., கட்சியிலிருந்து ராதாரவி, தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு…
பொதுவாக நான் அறிக்கை கொடுப்பது அரிதான விஷயும். நான் பேசுவதை விட என் பணி பேசும் என்று நினைப்பவள். ஆனால் சில நேரங்களில் இது போன்ற செயல்களுக்கு நான் குரல் கொடுத்தே ஆக வேண்டியிருக்கிறது.
முதலில் ராதாரவியின் வெறுக்கத்தக்க பேச்சுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த திமுக., தலைவர் முக.ஸ்டாலினுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
ராதாரவி போன்று பெண்களை வெறுக்கத்தக்க பேசும் ஆண்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலியல் ரீதியாக கருத்து சொல்லி, பெண்களை தரம் தாழ்த்தும் ஆண்கள் குடும்பத்தில் வாழும் பெண்கள் மீதும் நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்.
மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு முன் மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். பெண்களுக்கு இது கடினமான காலம். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். ஆனால் ராதாரவி போன்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்காக மலிவான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இது போன்ற பேச்சுகளை சிலர் கைதட்டி, சிரித்து உற்சாகப்படுத்துகின்றனர்.
ராதாரவி போன்றவர்களின் பேச்சை ரசிகர்களும், பொதுமக்களும் கண்டிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடவுள் அருளால் அற்புதமான துறையில் நல்ல வாய்ப்புகள் வருகின்றன. எனது நடிப்பு திறனுக்கு ரசிகர்களும் ஒரு இடத்தை கொடுத்துள்ளனர். எனக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பல விதமான கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்.
இறுதியாக, நடிகர் சங்கத்திற்கு ஒரு கேள்வி. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, விசாகா குழு வழிகாட்டுதல்படி, நடிகர் சங்கத்தில் புகார் குழு ஒன்றை அமைப்பீர்களா.?
எனக்கு ஆதரவாக துணை நின்ற அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

