தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘கட்டா குஸ்தி 2 ‘ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சுவராசியும் கூடுதலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்திருப்பதால்… ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசருக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஸ் காந்த் , காளி வெங்கட் , கருணாகரன் , ஜாரா, மோக்ஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கொமடி ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் உரையாடலும், காட்சிகளும் தரமான நகைச்சுவையை பிரதிபலிப்பதால்.. .. இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.












