ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவியிடம் தங்கள் நாட்டு அதிபர் சார்பாக மன்னிப்புக் கேட்டு ஏராளமான பிரேசில் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மனைவி அவரை விட 25 வயது மூத்தவர் என்பதையும், பிரேசில் அதிபரைவிட அவரது 3-வது மனைவி 27 வயது இளையவர் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு உருவான மீம்ஸில் பிரேசில் அதிபர் போல்சனாரோவும் கேலிக் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அமேசான் காட்டுத் தீயை அணைப்பது தொடர்பான விவாதம் தனிப்பட்ட முறையிலான தாக்குதலாக திரும்பியது குறித்து பிரேசில் அதிபருக்கு கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையில், அதிபர் போலசனாரோவின் கருத்து தங்கள் கருத்தல்ல என்றும் மன்னிக்க வேண்டும் என்றும் ஆங்கிலம், போர்ச்சுகீசியம், மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சமூக வலைதளங்களில் பிரேசில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போல்சனாரோ தங்கள் பிரதிநிதி அல்ல என்றும், அவரது கருத்துக்கு தாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் மேக்ரானின் டிவிட்டர் பக்கத்தை இணைத்து இந்த கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.