யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து முறையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவரசர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ. மரியதாஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை (31) கொழும்பில் உள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் பிரதி அமைச்சரை சந்தித்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கையளித்தனர்.
இதன்போது, கடல் அட்டை பண்ணைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
மெலிஞ்சிமுனை பகுதியில் தங்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணைகளுக்கான அனுமதிகளை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீனவ பிரதிநிதிகள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையான ஏற்பாட்டில், அண்மையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளை அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த கடல் அட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், அனுமதி வழங்கும் செயற்பாட்டில் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சில தரப்பினர் முன்னதாக ஊடக சந்திப்பொன்றின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாக மீனவ பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மீனவ மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, குறித்த விவகாரம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஏற்கனவே அறியப்படுத்தியுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த விடயத்தில் தனிப்பட்ட கட்சி அரசியலுக்கோ அல்லது வேறு எந்தப் பின்னணிக்கோ இடமில்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், கடல் சார்ந்த எந்தவொரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் முறையாகக் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆய்வுகளின் அடிப்படையிலேயே கடல் அட்டை பண்ணைகள் தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறு கடற்றொழிலாளர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளுக்கோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, மெலிஞ்சிமுனை பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு, சிறு கடற்றொழிலாளர்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேலதிக ஆலோசனைகளை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



















