வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு உறவுகளை கைளித்த இடமான வட்டுவால் பாலம் வரையில் பேரணியாக செல்ல உத்தேசித்துள்ளதாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கவனயீர்ப்பு பேரணி, உறவுகளை கையளித்த வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

