கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அத்துடன், இம்முறை நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 71.66 வீதமானோர் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் 69.34 வீதமும், வவுனியா மாவட்டத்தில் 68.28 வீதமும், யாழ். மாவட்டத்தில் 67.02 வீதமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 வீதமும், கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 வீதமும் மாணவர்கள் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 வீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 வீதமும், திருகோணமலை மாவட்டத்தில் 53.17 வீதமுமான அடைவுமட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

