அமைச்சரவையை 30 பேருக்குள் வரையறுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுத்திருந்தால் தானும், ரிஷாட் பதியுத்தீன் எம்.பி.யும் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் எடுக்காமல் தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை எந்தவித அழுத்தங்களும் இன்றி எடுத்துள்ளதாகவும் மனோ கணேசன் எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க தரப்பு கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலும் இது தொடர்பில் தமது கருத்துக்களை மனோ கணேசனும் ரிஷாட் பதியுத்தீன் எம்.பியும் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
உண்மையில், இந்த தீர்மானங்கள் நாட்டிலுள்ள சகல தரப்பினரதும் வரவேற்பைப் பெற்றுத் தரும் என்பதில் இரு கருத்துக்கள் இருக்க முடியாது. சிறுபான்மைக் கட்சிகள் அமைச்சுப் பதவிகளுக்கு விலை போகின்றவர்கள் என்ற கருத்தை, இந்த தீர்மானம் நிச்சயம் சரிசெய்யும் என நம்பிக்கை தெரிவிக்கலாம்.
கடந்த 55 நாட்களாக நாட்டில் ஏற்பட்ட அரசியல் பதற்ற நிலைமைகளின் போது, சிறுபான்மைக் கட்சிகளிடம் பல கோடிகள் தருவதாக விலை பேசப்பட்ட போதிலும் அதன் உறுப்பினர்கள் உறுதியாக நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தமையை பெரும்பான்மை புத்திஜீவிகள் கூட பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

