பழம்பெரும் ஹிந்தி நடிகை வித்யா சின்ஹா(71) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். நுரையீரல் மற்றும் இதய நோய் பிரச்னையால் பாதிக்கப்பட்ட வித்யாவிற்கு கடந்த ஞாயிறு அன்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் இன்று(ஆக.,15) பிரிந்தது.
மும்பையில் 1947ம் ஆண்டு, நவ.,15ல் பிறந்த வித்யா சின்ஹா, மாடலிங்காக இருந்து, 18வது வயதில் சினிமாவில் நுழைந்தார். ராஜா காகா படத்தில் அறிமுகமான இவருக்கு 1974ல் வெளிவந்த பாசு சாட்டர்ஜியின் ‘ரஜினிகாந்தா படம் புகழை தந்தது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். கடைசியாக 2011ம் ஆண்டு சல்மான் கானின் பாடிகார்டு படத்தில் நடித்தார்.
மறைந்த வித்யா சின்ஹாவுக்கு ஜான்வி என்ற மகள் உள்ளார். இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

