முஸ்லிம்களின் கலாசார ஆடையைத் தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஹபாயா ஆடை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியைகளை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை கிளையில் குறித்த ஆசிரியைகளினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர், திருகோணமலை கல்வி வலய பணிப்பாளர், கல்வி அமைச்சின் மாகாண பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

