இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் தலைவர் 166 படத்திலும் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் திரைப்படம் தலைவர் 166, இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாததால், இப்படி பெயரிட்டு அழைக்கின்றனர். விரைவில், படத்துக்கு பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருவதால், படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. தளபதி படத்துக்குப் பின், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இந்தப் படத்தில் பணிபுரிகிறார். இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பேட்ட படத்தை போலவே, இந்த படத்திலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பர் என தகவல்கள் கூறுகின்றன.
நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரை, இரு கதாநாயகிகளாக படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. அவர்கள் இருவரும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.