சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 8 நாட்களாக கொழும்பு, விகாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறும், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கறுவாத்தோட்டப் பொலிஸாரால் வியாழக்கிழமை (22) ஆம் திகதி பிற்பகல் கொண்டு வரப்பட்டது.
எனினும், நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்ட போதிலும் பிக்குகள் உள்ளிட்ட போராட்டக் குழுவினர் அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த நீதிமன்ற உத்தரவு தொடர்பில் தெளிவுபடுத்தி மனுவொன்றை தாக்கல் செய்வதற்காக, இச்சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பூஜ்ஜிய உலபனே சுமங்கல தேரர், பூஜ்ஜிய பலங்கொட காஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் நேற்றைய தினம் 23 ஆம் திகதி முற்பகல் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்ததுடன், நேற்றுமுன்தினம் பிறப்பித்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி அதில் மாற்றங்கள் கோரி போராட்டக்காரர்கள் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இருப்பினும், மனுவை விசாரித்த கொழும்பு பிரதான நீதிவான், முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்ததுடன் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பூங்காவில் தொடர்ந்து போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.













