தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக உணர்வுபூர்வமான வேடத்தில் நடித்திருக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தங்க புள்ள’ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தில் ஜீவா- ரஜிஷா விஜயன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏ சாமி கொல சாமி உன் முகம் பார்க்க வேண்டும் ஐயா, ஒரு வாட்டி கை நீட்டி உன் விரல் கோக்க தோணுது ஐயா’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத, பின்னணி பாடகர் முருகவேல் பாடி இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக மகன் அருகில் இருந்தும் அவனை நேரில் சந்தித்து அன்பை பகிர்ந்து கொள்ள இயலாமல் தவிக்கும் தந்தையின் தவிப்பை மெல்லிசையுடன் இந்தப் பாடல் விவரிப்பதால் , அனைத்து இசை ரசிகர்களிடமும் பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.












