அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலம் நிதிக் குற்றங்கள், பணச்சலவை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றைத் தடுப்பதற்கு அவசியமானதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும்போது பொதுமக்களின் தனியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி எம்.பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (5) இடம்பெற்ற நம்பிக்கை பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கை விமானப்படை செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்துக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அறக்கட்டளைகளின் உண்மையான பயனாளிகளை அடையாளம் காணுதல், நிதி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துதல், சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை இச்சட்டமூலத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
எனினும், பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது தனியுரிமை தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதேபோன்று, சிறிய நடைமுறைத் தவறுகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்படுவது அளவுக்கு அதிகமான தண்டனையாகும்.
அந்த வகையில் சிறிய குடும்ப மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு இலகுவான பதிவு நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல், பதிவு கால அவகாசத்தை 12 மாதங்களாக அதிகரித்தல், பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்த்தல் மற்றும் தவறுகளைத் திருத்துவதற்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்குதல் போன்ற திருத்தங்களை குழுநிலையில் மேற்கொள்ளவேண்டும்.
மேலும், சாதாரண நடைமுறைத் தவறுகளுக்கு குறைந்தளவிலான அபராதங்களை விதிப்பதுடன், திட்டமிட்ட நிதிக் குற்றங்கள் மற்றும் பணச்சலவை போன்ற கடுமையான குற்றங்களுக்கு மாத்திரம் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலை பேணப்படுவதன் மூலம் சிறந்த அறக்கட்டளை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றார்.












