சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து ஞானப்பிரகாசம் கிஷோர் என்பவரை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரிய மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன், எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனச் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு
மனுவை ஆராய்ந்த யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன், புதிய உப தவிசாளர் தெரிவை தடை செய்யக்கோரிய கோரிக்கையை நிராகரித்தார்.

அத்துடன் வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.













