பிரபல இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவலின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாராகிறது. புஷன் தயாரிக்கிறார், அமேல் குப்தா இயக்குகிறார். சாய்னாவாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். இதற்காக அவர் சாய்னாவை சந்தித்து சிலநாள் அவருடன் இருந்து, அவரது மேனரிசங்களை கற்றதுடன், பயிற்சியும் எடுத்தார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. சாய்னா பயிற்சி பெறுவது போன்ற காட்சிகள், அவர் கல்லூரி காட்சிகள் படமானது.
இந்த நிலையில் ஷ்ரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் நடிக்க முடியவில்லை. படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது, சாய்னா படத்துக்கு கொடுத்த கால்ஷீட் காலத்தில் அவர் காய்ச்சலில் இருந்தார். தற்போது அவர் ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்த மற்ற படங்களில் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதனால் அவரால் சாய்னா படத்தில் தொடர முடியாமல் அதிலிருந்து விலகிக் கொண்டார்.
தற்போது அவருக்கு பதிலாக பரிணிதி சோப்ரா நடிக்கிறார். தற்போது அவர் டென்னிஸ் பயிற்சி எடுத்து வருகிறார். ஷ்ரத்தா கபூர் நடித்த காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட இருக்கிறது. “ஷ்ரத்தா கபூர் கால்ஷீட் பிரச்சினையால்தான் படத்திலிருந்து விலகினார். வேறு எதுவும் காரணம் இல்லை. தற்போது பரிணிதி நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை முடித்து விடுவோம்” என்கிறார் தயாரிப்பாளர் புஷன்.