சில வருடங்களுக்கு முன் உறியடி என்ற சிறய படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் விஜயகுமார். அவரே தயாரித்து இயக்கி நடித்திருந்தார். கல்லூரிக்குள் நிலவும் ஜாதி பற்றி அந்தப் படம் பேசியது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை நடித்து இயக்கி உள்ளார். இதனை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:
இப்போது உள்ள சமூகத்திற்கு சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி2 வருவதற்கான காரணம். ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கானத் தீர்வைச் சொல்லும் படமாக உறியடி2 வந்துள்ளது. இந்தப்படம் முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள்.
எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப்பாளியைத் திருப்திப் படுத்தணும்.என்றார்.

