தமிழ் சினிமாவில் உள்ளம் கேட்குமே படம் மூலம் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கியவர் ஆர்யா. ஆனால், அந்தப் படம் வருவதற்கு முன்பே வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படம் ஆர்யாவுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.
நான் கடவுள் படம் ஆர்யாவுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின் வெளிவந்த மதராசப் பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.
ஆர்யாவைப் பற்றி அடிக்கடி ஏதாவது காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டேயிருப்பது வழக்கம். அவரைப் பற்றியும் அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகள் பற்றியும்தான் அந்த கிசுகிசுக்கள் அமையும்.
அப்படித்தான் அவரைப் பற்றியும், அவருடன் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை சாயிஷா பற்றியும் வந்தது. ஆனால், இந்த முறை அது கிசுகிசுவாக இல்லாமல் கல்யாணத்தில் முடிந்துவிட்டது.
இருவருடைய காதல் திருமணம் இன்று(மார்ச் 10) மாலை 6.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முஸ்லிம் முறைப்படி நடைபெற உள்ளது. இருவருமே முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
விழாவுக்கு இரு குடும்பத்தினருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படி அழைக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார் என்பது இன்று இரவு அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகே தெரியும்.
திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் திரையுலகப் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆர்யா தமிழ் சினிமாவி அறிமுகமாகி இங்குதான் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். சாயிஷா தெலுங்கில் அறிமுகமாகி தமிழில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சாயிஷா மும்பையைச் சேர்ந்தவர். ஆனால், இருவரது திருமணம் அவர்கள் வசிக்கும் ஊரில் நடக்காமல் பொதுவான இடமாக ஹைதராபாத்தில் நடப்பது ஆச்சரியமாக உள்ளது.
இதனிடையே, ஆர்யா நடிக்கும் புதிய படமான டெடி படத்தின் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. சாயிஷாவும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பைத் தொடர்கிறார்.

