நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி எதிர்வரும் முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் ‘கர’ திரைப்படம் – வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறும் என அப்படத்தின் நாயகனும், முன்னணி நட்சத்திர நடிகருமான தனுஷ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ கர ‘ திரைப்படத்தில் தனுஷ், மமீதா பைஜு , கே எஸ் ரவிக்குமார் ,கருணாஸ் , ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம் எஸ் பாஸ்கர் , ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் . தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே . கணேஷ் தயாரித்திருக்கிறார்.
முப்பதாம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் தனுஷ் பேசுகையில், ” இப்படத்தின் டைட்டில் ரசிகர்களை சென்றடையவில்லை என ஒரு தரப்பினர் படக் குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார்கள். சில தருணங்களில் டைட்டிலுக்காக கதை இருக்கும். பல தருணங்களில் கதைக்காக பொருத்தமாக டைட்டில் அமைந்திருக்கும். அந்த வகையில் இந்தப் படத்துக்கு கதைக்கு பொருத்தமான டைட்டிலாகத் தான் ‘கர ‘ இருக்கிறது. இதை படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்த பிறகு உணர்ந்து கொண்டாடுவார்கள்.
எம்முடைய திரையுலக அனுபவத்தில் டைட்டில் சரியில்லை என்று ‘வேலையில்லா பட்டதாரி’ மற்றும் :திருச்சிற்றம்பலம் ‘ ஆகிய இரண்டு திரைப்படங்களை குறிப்பிட்டனர். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அதேபோல் இந்த திரைப்படமும் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகும். இயக்குநர் விக்னேஷ் ராஜா கடும் உழைப்பாளி.
இந்த படத்தை அவர் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார். நான் வியந்த… தொடர்ந்து பணியாற்ற விரும்பக்கூடிய இயக்குநர்களில் ஒருவராக விக்னேஷ் ராஜா இருக்கிறார். இந்த திரைப்படம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இருபத்தி ஐந்தாவது திரைப்படம். எனக்கும் 25 ஆவது படத்திற்கும் ராசி உண்டு. அந்த வகையிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்” என்றார்.
இதனிடையே தனுஷ் நடிப்பில் வெளியான கர படத்தின் முன்னோட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வியலுக்காக அப்பகுதியில் செயல்படும் வங்கிகளை கொள்ளையடிக்கும் கொள்ளையனை பற்றி விவரிக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் ..வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் பதினெட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது என்பதும், இதன் காரணமாக இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

