40 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று நடைபெற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது. ஈ.பி.டி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பன கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கின.
தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளுக்காக நேற்று பிற்பகல் 2 மணிக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கரைதுறைப் பற்றுப் பிரதேச சபை கூடியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிசாளர் வேட்பாளராக கனகையா தவராசாவை முன்மொழிந்தது. சுயேச்சைக் குழு தவிசாளர் வேட்பாளராக ஜோசப் அமலதாஸை முன் மொழிந்தது. பெரும்பான்மையானவர்கள் பகிரங்க வாக்கெடுக்குப்பு விருப்பம் தெரிவித்ததால் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கனகையா தவராசா 17 வாக்குகளையும், ஜோசப் அமலதாஸ் 3 வாக்குகளையும் பெற்றனர்.
ஈ.பி.டி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.க, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி என்பன கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கின. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன நடுநிலமை வகித்தன.
உப தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இ.ரவீந்திரனை முன்மொழிந்தது. வேறு எவரும் முன்மொழியப்படாததால் ஏகமனதாக இ.ரவீந்திரன் தெரிவினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி. சிவமோகன், வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் சிவனேசன், உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே விவாஜிலிங்களம், புவனேஸ்வரன் ஆகியோர் சபை அமர்வுகளைப் பார்வையிட்டனர்.
கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் 24 ஆசனங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சியும், சுயேச்சைக் குழுவும் தலா 3 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி தலா 2 ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தலா ஓர் ஆசனங்களையும் கொண்டுள்ளன.

