நடிகை ஓவியாவுக்கு படங்களில் நடித்தபோது கிடைக்காத பெயர், புகழ் பிக்பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. அவருக்கு ஆர்மி உருவாக்கும் அளவுக்கு ரசிகர்கள் சென்றனர். எங்கு சென்றாலும் அவரை கொண்டாடினர். இந்த பெயரை 90 எம்எல் என்ற ஒரே படத்தில் மூலம் காலி செய்துவிட்டார் ஓவியா.
அனிதா உதீப் என்ற பெண் இயக்குநர் இயக்கிய இப்படத்தின் டிரைலர் வெளியானபோதே அவர் மீது நெகட்டிவ் இமேஜ் விழுந்தது. இயக்குநரும், ஓவியாவும் டிரைலர் பார்த்து படத்தை முடிவு பண்ணாதீர்கள் என மாறி மாறி கூறினர். இது பெண்களுக்கான படம் என வக்காலத்து வாங்கினர்.
படம் வெளிவந்த பின்னர் சமுக வலைதளங்களில் இருவரையும் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். படம் முழுக்க ஓவியா புகைப்பிடிப்பது, சரக்கடிப்பது, கஞ்சா அடிப்பது, அளவுக்கு மீறிய உதட்டு முத்தக்காட்சி, ஐந்து பெண்களுடன் சேர்ந்து, கணவன் – மனைவிக்கு இடையே நடக்கும் அந்தரங்க விஷயங்களை வெட்ட வெளிச்சமாக பேசுவது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது என ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது.
ஒரு பெண் இயக்குநரின் படமா இது என்று முகம் சுளிக்கும் அளவு கலாச்சார சீரழிவு தான் இந்த படம் என தாரளமாக சொல்லலாம். ஏற்கனவே ஹரஹர மஹாதேகவி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் வெளிவரும் நிலையில் அதையும் மிஞ்சி இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறது.
இது போன்ற படங்கள் தொடர்ந்து வந்தால் இளைய சமுதாயமே பாதிக்கப்படும் என்பது நிதர்சனம். பெண்கள் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லி, இதுபோன்று படம் எடுத்து பெண்களின் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாமே.