இந்தியாவுக்கு எதிராக கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஐசிசி ஒழுக்க விதிகளின் நிலை 1 பரிந்துரையை மீறியதற்காக இலங்கை வீரர் ப்ரபாத் ஜயசூரியவுக்கு உத்தியோகபூர்வமாக கண்டன எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போட்டியின் போது ‘கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துதல் மற்றும் முறைகேடாகப் பயன்படுத்துதல்’ தொடர்பான ஐசிசி ஒழுக்க விதியின் பிரிவு 2.2ஐ ஜயசூரிய மீறியது கண்டறியப்பட்டது.
மேலும் ஜயசூரியவின் ஒழுக்கம் தொடர்பான செயற்பாடுகள் பதிவில் ஒரு தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாத காலப் பகுதியில் அவர் செய்த முதல் தவறு இதுவாகும்.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் ஆட்டமிழந்த ப்ரபாத் ஜயசூரிய, வீரர்கள் தங்கும் அறைக்கு திரும்புகையில் எல்லைக் கோட்டிலிருந்த விளம்பரப் பலகைகளை தனது துடுப்பால் அடித்ததால் இந்த தவறு நிகழ்ந்தது.
ஜயசூரிய தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஐசிசி உயர் அடுக்கு தீர்ப்பாளர் அண்டி பைக்ரொவ்ட் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக் கொண்டதால், அதிகாரப்பூர்வ விசாரணை எதுவும் தேவைப்படவில்லை.
கள மத்தியஸ்தர்கள் அஹ்சன் ராஸா, ஷர்ஃபுத்துல்லா இப்னே ஷாஹித், மூன்றாவது மத்தியஸ்தர் ரொட் டக்கர் மற்றும் நான்காவது மத்தியஸ்தர் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தினர்.
நிலை 1 மீறல்களுக்குக் குறைந்தபட்ச தண்டனையாக அதிகாரப்பூர்வ கண்டனமும், அதிகபட்ச தண்டனையாகப் போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகளும் வழங்கப்படும்.












