மலையாள திரையுலகில் ஹீரோவின் நண்பராக, குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக என படிப்படியாக முன்னேறி, தற்போது ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் சன்னி வெய்ன். துல்கர் சல்மான் அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் தான் இவரும் அறிமுகமானார். அப்போது இருந்து இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்களாக மாறி நான்கு படங்களுக்கு மேல் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சன்னி வெய்னின் திருமணம் இன்று(ஏப்.,10) காலை குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான ரஞ்சனி என்பவரைத்தான் திருமணம் செய்து கொண்டுள்ளார் சன்னி வெய்ன்.
கோவிலில் நடைபெற்றதால் இந்த திருமணத்தில் உறவினர்களும் வெகு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். திரையுலக பிரபலங்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை திருமணம் முடிந்த பின்பு நடிகர் திலீப் நேரிலேயே வந்து மணமக்களை வாழ்த்தினார். நாளை (ஏப்-11) இவர்களது திருமண வரவேற்பு கொச்சியில் மிக விமரிசையாக நடைபெற உள்ளது

