எந்த சொத்து யாருக்கு? ஜெயலலிதா எழுதிய உயில் என்ன சொல்கிறது தெரியுமா?
தனது எந்தெந்த சொத்துக்கள், யார் யாருக்கு போக வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயில் எழுதி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது சொத்துக்கள் யாருக்கு சென்று சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்பது குறித்த கேள்வி சாமானியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
குறிப்பாக, சென்னையின் மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, போயஸ் கார்டன், வேதா இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுகிறது. இந்த இல்லம், 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்டது. கட்டிட பரப்பளவு 21662 சதுர அடியாகும்.
போயஸ் கார்டன்
இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லம், அவரது தோழி சசிகலாவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 2 வருடங்களுக்கு முன்பே, சசிகலாவுக்குத்தான் அந்த சொத்து என ஜெயலலிதா உயில் எழுதி வைத்ததாக ஒரு தகவல் பரவுகிறது. அல்லது பரப்பப்படுகிறது.
வேதா இல்லம்
போயஸ் கார்டன் சொத்து 1967ம் ஆண்டு, ஜெயலலிதாவால் அவரது அம்மா சந்தியாவுடன் சேர்ந்து ரூ.1.32 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. வேதவள்ளி என்ற ஜெயலலிதா தாயின் இயற்பெயரை மனதில் வைத்து, அந்த வீட்டுக்கு வேதா இல்லம் என பெயர் சூட்டியிருந்தார் ஜெயலலிதா.
பிரமாண பத்திரம்
ஜெயலலிதா கடந்த சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து மதிப்புபடி, அவரது சொத்து மதிப்பு ரூ.113.73 கோடியாகும். இதில் அசையும் சொத்துக்கள் ரூ.41.63 கோடியாகும். அசையா சொத்துக்கள் ரூ.72.09 கோடியாகும். கையிலுள்ள ரொக்கம் ரூ.41000 மற்றும் கடன் ரூ.2.04 கோடியாகும்.
அசையும் சொத்துக்கள்
ஜெயலலிதா தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தபடி, அவரிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள அம்பாசிட்டர், மகேந்திரா ஜீப், மஸ்டா மேக்சி, ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள மகேந்திர பொலேரோ, டெம்போ டிராவலர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கான்டசா, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டெம்போ டிராக்ஸ், தலா ரூ.20 லட்சம் மதிப்புள்ள இரு, டொயோடா பிரடோஸ் ஆகியவை அவரின் வாகனங்களாக இருந்தன.
பார்ட்னருக்கு
ஜெயலலிதா எழுதியுள்ள உயில்படி, கோடநாடு எஸ்டேட் மற்றும் சசி என்டர்பிரைசஸ் ஆகியவை அந்த சொத்தின் வாழும் பார்ட்னருக்கு செல்ல உள்ளது.
போலவே, ஜெயா பப்ஷிகேஷன்ஸ் நிறுவனமும், பார்ட்னருக்கு போகிறது. ஜெயலலிதா தவிர்த்த இன்னொருவர் இந்த சொத்துக்களின் பார்ட்னர். ஒருவர் இறந்து விட்டால் மற்றொருவருக்கு முழு உரிமையும் செல்வதுதான் அதன் சாராம்சம்.
அந்த நபர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.